திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பழமையான உச்சிஷ்ட விநாயகர் கோவிலுக்கு அருகே ஆற்றுக்குள் சுமார் 2 அடி உயரமுள்ள தொன்மையான கற்சிற்பம் ஒன்று மண்ணில் புதைந்து கிடக்கிறது.
இந்தச் சிற்பத்தின் தலையில் ஜடாமகுடம் போன்ற அமைப்பும், நீண்ட காதுகளில் பெரிய குண்டலங்களும், மார்புப் பகுதியில் அணிகலன்களும் காணப்படுகின்றன. இதன் கலைநயத்தையும் வடிவமைப்பையும் வைத்து பார்க்கும்போது, இது சைவ மரபைச் சேர்ந்த தெய்வச் சிற்பமாக இருக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இதன் உண்மையான காலம் மற்றும் அடையாளத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரே உறுதி செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, மண்ணில் புதைந்துள்ள இந்த தொன்மைச் சிற்பத்தை உடனடியாக மீட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்வதுடன், பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்