வேடசந்தூர்: ரங்கமலையில் வாழும் குரங்குகளுக்கு மழைக்காலம் மட்டுமின்றி வறட்சி காலத்திலும் தொடர்ந்து உணவு, குடிநீர் வழங்கி வரும் ஒரு சிவ பக்தரால், இம்மலை வாழ் குரங்குகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. நெடுஞ்சாலை ஓரம் நடைபெறும் இந்நிகழ்வை பார்ப்பவர்கள் மனம் நிறைந்து வியக்கின்றனர்.
திண்டுக்கல் கரூர் மாவட்டங்களின் எல்லை பகுதியாக உள்ளது ரங்க மலை கணவாய். இந்த வழியாகத்தான் திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு மாவட்ட எல்லையில் எடச்சியாயி கோயில் உள்ளது. இங்கு நீண்ட காலமாய், வாகன ஓட்டிகள் சாமியை தரிசித்து விட்டு ரோட்டில் சிதறு தேங்காய் அடித்து செல்வது வழக்கம். அந்த தேங்காய்களை பொறுக்கி தின்பதற்காக ரங்கமலை பகுதி குரங்குகள் தினமும் கீழே இறங்கி வந்து செல்வது வாடிக்கை. இப்படி வந்து செல்லும் குரங்குகள் வறட்சி காலத்தில் போதிய உணவு தண்ணீர் இன்றி தவித்து வந்தது. நெடுஞ்சாலை வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் குரங்குகளின் பரிதாப நிலை கருதி குரங்குகளுக்கு உணவு பொட்டலங்களை குறிப்பாக வாழைப்பழம், முறுக்கு, நிலக்கடலை உள்ளிட்ட தின்பட்டங்களை வீசி செல்வது இன்றளவும் வாடிக்கை யாகவே உள்ளது. இதே போல் அரவக்குறிச்சியில் இருந்து வார சந்தைகளுக்கு வாழைப்பழங்களை ஏற்றி வரும் வாகனத்தினரும், மனம் உவந்து பழங்களை அங்கே போட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் சிவ பக்தரான கூம்பூரைச் சேர்ந்த முன்னாள் டீக்கடை நடத்திய பழனிச்சாமி என்பவர் ஆஞ்சநேய பக்தராக மாறிய நிலையில், ரங்கமலை கணவாய் பகுதி வால் குரங்குகளுக்கு அங்கே ஓர் தண்ணீர் தொட்டி அமைத்து தினமும் தண்ணீர் ஊற்றினார். அந்த தண்ணீரை அப்பகுதியில் மேயும் ஆடு மாடுகள் குடித்துச் சென்றதால், யோசித்த அவர், சற்று உயரமாக திட்டு அமைத்து அதில் இரண்டு தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார். தற்போது எந்தப் பிரச்சனையும் இன்றி மலைவாழ் குரங்குகள் அதில் ஏறி தண்ணீர் குடித்துச் செல்கின்றன.
இது குறித்து கூம்பூர் பழனிச்சாமி கூறியதாவது: நான் ஆஞ்சநேய பக்தன். வறட்சி காலத்தில் இங்குள்ள குரங்குகள் குடிக்க தண்ணீர் இன்றி தவித்ததால் சில ஆண்டுகளாக இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். அதேபோல் தனது சொந்த செலவிலும், சுற்றுப்பகுதியில் உள்ள கடைக்காரர் களிடம் மீதமான பலகாரங்கள் பழங்களை வாங்கி வந்து, இந்த ஆஞ்சநேயர் களுக்கு (குரங்குகளுக்கு) வழங்கி வருகிறேன். என் வாழ்நாள் உள்ளவரை இந்த பணி தொடரும் என்றார்.