அன்னூர்: கரியாம்பாளையம், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
கரியாம்பாளையத்தில் பழமையான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 14ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், விமான கலசங்கள் நிறுவுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. இன்று காலை 8:50 மணிக்கு, விமானங்களுக்கும், இதையடுத்து, சக்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்கினர். பேரொளி வழிபாடு நடந்தது. சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 12 நாட்களுக்கு தினமும் இரவு 7:00 மணிக்கு மண்டல பூஜை நடைபெறும், என, விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.