கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் குளத்தை சீரமைத்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் எதிரே உள்ள குளம், ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. இக்கோவில் குளத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, பக்தர்கள் புனித நீராடி, முருகனை வழிபட்டு வந்தனர். அதன்பின், முறைான பராமரிப்பின்றி கோவில் குளம் சீரழிந்து வருவதை கண்டு பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். குளத்தின் தெற்கு பகுதி சுற்றுச்சுவர், சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. மீதமுள்ள சுற்றுச்சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன், இடிந்து விழுந்த பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் கட்டிய பேரூராட்சி நிர்வாகம், மற்ற பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை கண்டுக்கொள்ளவில்லை என, பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இடிந்து விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவரால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், குளத்தில் கழிவுகள் சூழ்ந்தும், செடி, கொடிகள் வளர்ந்தும் துார்ந்துள்ளது. எனவே, கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் குளத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.