திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. ஏறத்தாழ, 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
மூலவராக அங்காளம்மன் அருள்பாலிக்க, பேச்சியம்மன், துர்க்கை, விநாயகர் மற்றும் ராகு, கேது ஆகிய பரிவார தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக உள்ள இக்கோவில், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குலதெய்வமாக உள்ளது. கோவிலில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம், தீர்த்த கிணறு மற்றும் 13 அடி உயரம் கொண்ட கொடிமரம் ஆகியவை இக்கோவிலின் கூடுதல் சிறப்பம்சம். கோவில் வளாகத்தில் ‘பிராய்’ மரம் தல விருட்சமாகவும் உள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி உட்பட, கேட்டை நட்சத்திர தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் அங்காளம்மனுக்கு நடந்து வருகிறது. இதுதவிர, தமிழ் வருடப்பிறப்பு, நவராத்திரி, ஆடி வெள்ளி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பண்டிகைகளின் போதும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கின்றன.
ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் குண்டம் விழாவுக்கு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர்.
பெண்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், சிறுவர் சிறுமியர், வயதானவர்கள் என, வயது வேறுபாடு இன்றி விரதம் இருந்து, குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்துடன் திருக்கல்யாண வைபவம், திருவிளக்கு பூஜை, கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் என, ஐந்து நாட்களும் குண்டம் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குண்டம் வரலாறு பிரசித்தி பெற்ற இந்த குண்டம் திருவிழாவுக்கு என ஒரு தனி வரலாறும் உள்ளது. முன்னொரு காலத்தில், அங்காளம்மனின் தீவிர பக்தர் ஒருவரின் கனவில் வந்த அம்மன் கோவிலில் குண்டம் இருப்பதாகவும், அதனை சீரமைத்து தனக்கு குண்டம் விழா நடத்த வேண்டும் எனவும் அம்மன் கூறியதால், அம்மன் உத்தரவை ஏற்ற அந்த பக்தர் ஊர் பொதுமக்களிடம் இது குறித்து தெரிவித்தார்.
அன்றைய தினமே பொதுமக்களின் ஆதரவுடன் கோவில் முன் உள்ள நிலம் தோண்டப்பட்டது. அதில், இரண்டு அடி அகலம், 40 அடி நீளம் உள்ள குண்டம் இருந்ததைக் கண்டு பக்தர்கள் பரவசப்பட்டனர். இதனால், குண்டத்தை பராமரித்து ஆண்டுதோறும் குண்டம் விழா நடத்தப்பட்டுகிறது. தொடர்ந்து 50 ஆண்டுகளாக குண்டம் விழா நடந்து வருகிறது.
இருப்பிடம்: பல்லடத்தில், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. திருப்பூரில் இருந்து 15 கி.மீ. தூரத்திலும், பல்லடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 300 மீட்டர் துாரத்திலும் கோவில் அமைந்துள்ளது.
கோவிலில் அருள்பாலித்து வரும் அங்காளம்மனை வணங்கினால் மாங்கல்ய தோஷம், திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காகவே, ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.