துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட பதாகையால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். திருவிழா காலங்களில் நேரங்களில் மாற்றம் ஏற்படும்.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் என்ற பெயரில், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு என்ற வாசகங்களுடன் ஒரு பதாகை நேற்று வைக்கப்பட்டது. அதில், கட்டண தரிசனத்திற்கு மாலை 6:30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனத்திற்கு இரவு 7:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். விஷேச மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் இரவு 8:00 மணி வரையும், பொது தரிசன வரிசையில் பக்தர்களின் கூட்டத்தை பொறுத்தும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது இந்த அறிவிப்பால் மாலை மற்றும் இரவு நேரங்களில் முருகனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கோவில் நிர்வாகம் தரப்பில், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவில் நடை வழக்கம்போல இரவு 9:00 மணிக்குதான் சாத்தப்படும். பக்தர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.