காவல் பைரசந்திரா: பெங்களூரு காவல் பைரசந்திரா தொட்டண்ணா நகரில் பிரசித்தி பெற்ற தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 6ம் தேதி ஆடி கிருத்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு காவல் பைரசந்திரா தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இவ்விழாவை ஒட்டி, கடந்த 17 ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. இதையொட்டி, பில்லண்ணா கார்டன் விநாயகர் கோவிலிலிருந்து கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலை அடைந்த பின், கொடி மரத்திற்கு அபிேஷகம் செய்யப்பட்டது. அதன் பின் கொடியேற்றப்பட்டது.
சுமங்கலி பூஜை கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதன் பின் மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம், மஹாமங்களாரத்தி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று மாலையில், கோவிலை சுற்றி வள்ளி –தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவம் நடந்தது. இரவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, இன்று மாலை 5:30 மணியில் இருந்து, இரவு 9:00 மணி வரை சுமங்கலி பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தைகள் பங்கேற்று, பூஜை செய்வர்.
ஆகஸ்ட் 2ம் தேதி இரவு 8:00 மணிக்கு, பெங்களூரு காதம்பரி கலாஷேத்ராவின் பரதநாட்டியம் நடக்கிறது. 5ம் தேதி பரணி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 7:00 மணிக்கு காவல் பைரசந்திரா ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம் துவங்குகிறது.
இதில் பங்கேற்போர், தங்கள் பெயரை கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அன்றைய தினம் நேரடியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால், இதர அபிஷேக பொருட்களை இரவு 8:00 மணிக்குள் எடுத்து வர வேண்டும்.
இரவு 8:00 மணி முதல் 12.05 மணி வரை சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி நடக்கிறது. இரவு 8:30 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது.
ஆகஸ்ட் 6ம் தேதி காலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
பக்தர்கள் தாங்கள் சுமந்து வரும் காவடிகளை, சுப்பிரமணிய சுவாமியின் பாதத்தில் சமர்ப்பித்து ஆசி பெறலாம். அன்று காலை 10:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
தங்க கிரீடம் அன்றைய தினம், பக்தர்கள் நன்கொடையால் செய்யப்பட்ட தங்க கிரீடம், முருக பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது. சிறப்பு விருந்தினர்களாக புலிகேசிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ், துணை முதல்வர் பரமேஸ்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
விழாவை முன்னிட்டு 5ம் தேதி இரவு முதல், 6ந் தேதி இரவு 11:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், அதன்பின்னரும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை, கோவி லின் தர்மகர்த்தா முனிராஜு, தலைவர் தயாளமணி, பொது செயலர் முனேகவுடா, துணை தலைவர்கள் பெருமாள், ஜனார்த்தனா, பொருளாளர் மகேந்திரன், இணை செயலர்கள் சேகரன், மோகன், துணை கமிட்டி தலைவர் சுரேஷ், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சுனில்குமார் சிங், சுப்பிரமணி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.