பாகூர்: கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி – கடலுார் சாலை, கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீமிதி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, இரவு 8:00 மணியளவில் கொடியேற்றி, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, தினமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. தீமிதி திருவிழா வரும் 7ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10:00 மணிக்கு வாழ்முனிஸ்வரர் சுவாமிக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி, மதியம் 12:00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம், மாலை 5:00 மணிக்கு தீ மிதி உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி தெப்ப உற்சவம், 9ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி, விழாக்குழு தலைவர் மூர்த்தி தலைமையில் நிர்வாகி கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.