கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகள் படையலிட்டு வழிபாடு



சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ஆடி பெருக்கையொட்டி, புதுமண தம்பதிகள் படையலிட்டு, திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, தண்ணீருக்கு நன்றி தெரிவித்தனர்.


தமிழகம் முழுவதும் நேற்று ஆடி பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக காவிரி கரையோர பகுதியில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதால், காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக, இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


மேலும் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற வேண்டியும் ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரைகளுக்கு சென்று, கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். மேலும், புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை பத்திரப்படுத்தி வைத்து ஆடிப்பெருக்கன்று, அதை ஆற்றில் விடுவது வழக்கம். அந்த வகையில், காவிரியின் கடைமடை பகுதியான சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றில், ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றங்கரையில் காலை முதல் ஆயிரக்கணக்கானோர், குடும்பத்தினருடன் குவிந்தனர். ஆற்றில் நீராடிய பெண்கள் கரையோரத்தில் பூஜை செய்து காவிரி அன்னையை வழிட்டனர். புதுமண தம்பதிகள், ஆற்றங்கரையில் படையலிட்டு, ஆற்றில் இறங்கி தங்களின் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வேண்டினர். பூஜைகள் முடிந்த பின்னர், அனைவரும் கரையோரம் உள்ள பூங்காவில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவுகளை கும்பலாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகங்கை குளம் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்