கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு ஆடி சஷ்டி தின சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
முருகப்பெருமான் அசுரர்களை அழித்து, தேவர்களுக்கு அருளிய நாள் ஆடி சஷ்டி தினம். அதனைக் கொண்டாடும் விதமாக மாதம் தோறும் முருகனை வேண்டி சஷ்டி விரதம் இருப்பது வழக்கம். அத்துடன் முருகனுக்கு 3 விதமான விரதங்களான சஷ்டி திதி, செவ்வாய்கிழமை, கிருத்திகை நட்சத்திரம் ஆகிய நாட்களில் விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத்துடன் சஷ்டி தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், மாணவர்களுக்கு அறிவு கூடும். திருமண தடை விலகும். திருமணமானவர்களுக்கு பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது நமது நம்பிக்கை. அதன்படி கள்ளக்குறிச்சி சாமியார் மடம் திருநீற்றம்மை உடனருள் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. தொடர்ந்து கந்தர் அநுபூதி ஓதி பூஜை நடந்தது. வழிபாடுகளை கோவிலின் நிர்வாகி நாச்சியப்பன் அடிகளார் செய்திருந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.