சபரிமலை: சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விவசாயம் செழிக்கவும் மக்களின் வளமான வாழ்க்கைக்கும் வேண்டி வயலில் விளையும் நெற்கதிர்களால் கேரள கோயில்களில் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. சபரிமலை நடை இதற்காக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அச்சன்கோயில் உள்ளிட்ட தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் விளைவிக்கப்பட்ட நெற்கதிர்கள் அறுவடை செய்து தலை சுமையாக மலைக்கு கொண்டுவரப்பட்டது.
நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரு மூலவருக்கு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து நிறைபுத்தரிசி பூஜைகளுக்கான சடங்குகள் தொடங்கின. மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி பூஜிக்கப்பட்ட நெற்கதிர்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்த பின்னர் அதை சன்னதிக்குள் கொண்டு சென்றார். அங்கு பூஜைகளுக்கு பின்னர் அந்த நெற்கதிர் வெளியே கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் பூஜாரிகள் குடை பிடித்தபடி கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து வழக்கமான உஷபூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை, படி பூஜை, அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கேரள ஆகம விதிகளை பின்பற்றி பூஜைகள் நடைபெறும் கன்னியாகுமரி, சுசீந்திரம் , நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.