கந்தர்வக்கோட்டை அருகில் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு



புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மெய்க்குடிப்பட்டியில், 1,000 ஆண்டு பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


தஞ்சாவூர் சிவனடியார் குழுவினர், மெய்க்குடிப்பட்டியில் உள்ள பழமையான சிவன் கோவிலின் சுற்றுப்புறத்தை, சமீபத்தில் சுத்தம் செய்தனர். அப்போது, லிங்கம் மற்றும் அம்பாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.


இதுகுறித்து, குன்றாண்டார் கோவில் குருக்கள் முத்துசுப்பிரமணியன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டனுக்கு தகவல் அளித்தார். மணிகண்டன், தன் குழுவினருடன் அப்பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டபோது, தீர்த்தங்கரர் சிற்பத்தை கண்டெடுத்தார்.


அவர் கூறியதாவது: இங்குள்ள சிவன் கோவில், சோழர் காலத்தின் இறுதிப் பகுதியான 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலின் அருகில் உள்ள சமண மேடு என்ற பகுதியில், சிதிலமடைந்த நிலையில், 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பமும் கிடந்தது. ஒரே இடத்தில், பழமையான சமணர் சிற்பமும், அதைத்தொடர்ந்து சிவாலயமும் உள்ளதால், தமிழகத்தின் சமண, சைவ சமயங்களின் எழுச்சியையும், சமய ஒற்றுமையையும் ஆய்வு செய்ய உகந்ததாக உள்ளது. கருங்கல்லால் ஆன இந்த சிற்பத்தில், 3.5 அடி உயரம், 2 அடி அகலத்துடன், அர்த்தபத்மாசனம் நிலையில் தியான கோலத்தில், தீர்த்தங்கரர் அமர்ந்துள்ளார். இதன் பீடத்தில் சின்னங்கள் இல்லை. முகம், கை, கால்கள் சிதைந்துள்ளன. இவரின் காதுகள் நீண்ட துளையுடன் உள்ளன. தலைக்கு மேல் முக்குடை, பின்புறம் ஒளிவட்டம், இருபுறமும் சாமரம் வீசுவோரின் உருவங்கள் உள்ளதால், இது, முற்கால சோழர் கால கலைப் பாணி என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.   – நமது நிருபர் –


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்