மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். இந்தியா ஜப்பான் ஆன்மிக கூட்டமைப்பு சார்பில் ஜப்பான் நாட்டில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உலக நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தர்மபுரம் ஆதீன குருமஹா சன்னிதானம் ஜப்பான் சென்றுள்ளார். கடந்த 7 ம் தேதி, ஜப்பான் நாட்டில் ஹிரோசே நதிக்கு ஆரத்தி நடந்தது. உலக நன்மை வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் ஜப்பான் நாட்டில் சென்டாய் மாநிலத்தில் உள்ள புத்த விகாரத்தில் வேத சிவாசம வேள்விகள் நடந்தன.
தருமபுரம் ஆதீன குருமா சன்னிதானம் ஏற்பாட்டில் தமிழகத்திலிருந்து சிவாச்சாரியார்கள் அழைத்துச் செல்லப்பட்டு லட்சுமி ஹோமம், கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம், சரபர் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. முதல் முறையாக ஜப்பான் நாட்டில் இந்த யாகங்கள் நடத்தப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு ஜப்பானியர்களுக்கு அருளாசி வழங்கினார். ஜப்பானிய சிவ ஆதீனம் கும்ப குருமணிகள், புத்த விகார தலைமை பூஜாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.