உடுமலை: பிரதோஷத்தையொட்டி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில், திரயோதசி நாளில் பிரதோஷ காலமான மாலை நேரத்தில், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. செவ்வாய்கிழமைகளில் வரும் பிரதோஷம், ருண விமோசன பிரதோஷம் எனப்படுகிறது. நேற்று ருண விமோசன பிரதோஷத்தையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உடுமலை தில்லை நகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதே போல், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர், சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவில்களிலும் ருண விமோசன பிரதோஷ வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.