பல்லடம்: ‘108 என்ற எண் மிகவும் வல்லமை மிக்கது’ என, பல்லடத்தில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையின்போது சென்னை சிவயோகி ஆனந்தியம்மாள் பேசினார்.
பல்லடம், பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில், அப்பர் உழவாரப் பணிக்குழு, சேலம் குமரியாள் அறக்கட்டளை மற்றும் நாகர்கோவில் தாய்க்களம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை மற்றும் குபேர விளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.
சென்னை சிவயோகி ஆனந்தியம்மாள் பேசியதாவது: தற்போது நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையில் 108 பெண்கள் அமர்ந்துள்ளனர். 108 என்ற எண் மிகவும் வல்லமை மிக்கது. 108 என்பதில் 60 ஆண்டுகள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்கள் அடங்கியுள்ளன.
உங்களுக்கு என்ன தேவையோ அதை இறைவனிடம் கேட்பது உங்கள் பொறுப்பு. எது கிடைத்தால் உங்களுக்கு சரியாக இருக்கும் என இறைவன் நினைக்கிறாரோ, அது நிச்சயம் கிடைக்கும். மனிதனின் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்து தான் இருக்கும். இன்பத்தைப் போல் துன்பத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை எனக்கு கொடு இறைவா என்று நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து குபேர விளக்கு பூஜை நடந்தது, சிறப்பு அலங்காரத்தில் அருளானந்த ஈஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் சிவனடியார் ஆனந்தம் சுப்பிரமணியம், மதுரை நால்வர் அறக்கட்டளை சார்பில் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.