திருநெல்வேலி,; திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள 8ம் நூற்றாண்டு ஆண்டிச்சிப்பாறை குடைவரை கோயில் பராமரிப்பின்றி உள்ளது. கங்கைகொண்டானில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் பதினாலாம்பேரி அருகே பெரிய பாறையில் இக்கோயில் குடையப்பட்டுள்ளது. கருவறை மட்டும் உள்ளது. கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை. கருவறையில் சிவலிங்கம் செதுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முன்புற கோட்டத்தில் பிள்ளையார் சிற்பம் உள்ளது. அருகில் உள்ள பாறையில் ஜேஷ்டா தேவி சிற்பமும், இருபுறமும் மகன், மகள் சிற்பங்களும் உள்ளன. இடப்புறம் உள்ள பெரிய கோட்டமும் முழுமை பெறவில்லை. சிற்ப அமைப்பு மற்றும் எளிமை அடிப்படையில் இது 8ம் நூற்றாண்டை சேர்ந்தது.
இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து தொல்லியல் துறையினர் குடைவரை கோயிலை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைத்து ஒரு அறையும் கட்டியுள்ளனர். இருப்பினும் போதிய பாதுகாப்பு இல்லை. சுற்றுலா பயணிகளுக்கு விளக்கம் தர வழிகாட்டி இல்லை. எனவே தமிழகத் தொல்லியல் துறையினர் ஆண்டிச்சி பாறை விநாயகர் சிற்பம் மற்றும் இதே பகுதியில் உள்ள மறுகால் தலை சமணர் படுக்கை போன்றுவற்றை ஒருங்கிணைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.