சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மன் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை முதல் நண்பகல் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் நடந்த லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பரவசமூட்டும் பிரமாண்ட, சக்தி கொலுவிற்கு மதுரை மீனாட்சி அம்மன் வேடமணிந்து வந்த சிறுமியை மீனாட்சி அம்மனே வந்ததாக பக்தர்கள் வியந்து பார்த்தனர்.கொலுவை ரசித்த பக்தர்கள், சிறார்களுக்கு ஆன்மிக வினாடி – வினா நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.