திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் 10ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கவுள்ள நிலையில், அசுர பொம்மைகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மாத பிரம்மோத்சவத்தின்போது, வள்ளி திருக்கல்யாண உத்சவமும், கந்தசஷ்டி விழா நிறைவில் தெய்வானை திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா, வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி, தினமும் இரவு நேரத்தில் கந்தபெருமான் வள்ளி – தெய்வானையுடன் பல்லக்கு, கிளி, ஆட்டுக்கடா, புருஷாமிருகம், பூதம், வெள்ளி அன்னம், குதிரை, தங்கமயில், யானை உள்ளிட்ட வாகனங்களில், வீதி உலா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதான சூரசம்ஹார விழா, வரும் 15ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. அன்று, ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும். அதைத்தொடர்ந்து, தனித்தனியே ஆறு உருவ பொம்மைகளுடன் சூரசம்ஹாரம் நடைபெறுவது, இக்கோவிலின் சிறப்பாக உள்ளது.
அந்த வகையில், சிறப்பு மிக்க இவ்விழாவுக்காக கெஜமுகன், சிங்கமுகன், பானுகோபன், அகிமுகி, தாடுகன், சூரபத்மன் ஆகிய ஆறு அசுரர்களின் முழு உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. வண்ண காகிதம், காகிதக்கூழ், மூங்கில், சவுக்கு, சணல் சாக்கு போன்றவற்றால் அசுர பொம்மைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. புதுச்சேரி அடுத்த கலிதீர்த்தால்குப்பத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தலைமையில், 10க்கும் மேற்பட்ட ஸ்பதிகள் அசுர பொம்மைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள், இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, சிறுவர்கள் வீரபாகு வேடமணிந்து, அசுரர்களுடன் போரிட, காகித அட்டை வேல், வீரபாகு கலசங்கள் தயாரிக்கும் பணியும், முழுவீச்சில் நடந்து வருகிறது.
சூரசம்ஹார நிகழ்வு குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், அசுர பொம்மைகள் வெளியூரிலிருந்து இரும்பு சட்டத்தால் தயாரித்து எடுத்து வரப்பட்டன. அவை எடை அதிகமாக இருந்ததால், அசுர பொம்மைகள் ஊர்வலம் வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், பொம்மை தயாரிக்கும் பணி பாதித்தது. பொம்மை தயாரிப்பவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், கோவிலில் உள்ள ஓய்வு கூடத்தில், அசுர பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவையொட்டி, மற்ற ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் 16ம் தேதி, திருக்கல்யாண வைபவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவடைய உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.