திருவாடானை: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் வரை நடைபயணம் வந்தனர். தெலுங்கானா சங்காநெட்டி மாவட்டம் பிவிபிட்டு ஊரை சேர்ந்தவர்கள் சாயிலு 51, அஞ்சையா 45. இருவரும் உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும், தங்கள் ஊரிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புறப்பட்ட இவர்கள் ஹைதராபாத், கடம்பூர் வழியாக 1200 கி.மீ. நடந்து தமிழகத்தில் பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக ராமேஸ்வரத்தை நோக்கி செல்கின்றனர்.
நேற்று திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். புளியால் அருகே அப்பகுதி மக்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்கள் வரவேற்பு அளித்தனர். நீண்ட துாரம் நடந்து வந்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யும் இவர்களின் பக்தியையும், உறுதியையும் பாராட்டி தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர்.
குடும்பத்தினரையும் சொந்த ஊரையும் பிரிந்து வெயில் மழையை பொருட்படுத்தாமல் வருவதை மக்கள் பாராட்டினர்.
அவர்கள் கூறுகையில், நாட்டு மக்கள் நலமுடன் வாழ பாத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். ராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு அதன்பிறகு காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர்.