மேட்டுப்பாளையம்: காரமடையில் நடந்த பந்த சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ பந்தங்களை எடுத்து ஆடிவந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று முன்தினம் மாசிமகத் தேரோட்டம் நடந்தது.
நேற்று, தண்ணீர் சேவையும், பந்த சேவை நிகழ்ச்சியும் நடந்தன. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து, தேரோட்டத்தை காணவந்த பக்தர்களை விட, இரண்டு மடங்கு கூட்டம் தண்ணீர் சேவை, பந்த சேவை நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். ஒவ்வொரு ஊரை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக ஜமாப்பு அடித்து தீ பந்தங்களை கையில் பிடித்தும், தோலில் வைத்தும் தேர் செல்லும் வீதிகளில் ஆடி கொண்டு கோவிலை அடைந்து, அரங்கநாதப் பெருமாலை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் கோவை சரவணம்பட்டியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பக்தர்கள், 500 மீட்டர் காடா துணியில் அமைத்த, 75 கிலோ ராட்சத தீ பந்தத்தை ஒவ்வொரு பக்தர்களாக துாக்கி ஆடி வந்தனர். இவர்கள் கடந்த, 76 ஆண்டுகளாக தீ பந்தத்தை எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துவதாக தெரிவித்தனர்.நுாற்றுக்கணக்கான குழுவினர் அடித்த ஜமாப் மேளங்களின் சத்தம், காரமடை நகரை அதிரச் செய்தது. மேளத்துக்கு தகுந்த மாதிரி சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரை ஆண், பெண்கள் ஆடி மகிழ்ந்தனர்.