ஆண்டிபட்டி; மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோயில் அருகே விவசாய நிலங்களில் சிறுத்தை வந்து சென்றதற்கான தடயத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இங்குள்ள கதிர்வேல்புரத்தை ஒட்டி மலை அடிவாரத்தில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. விவசாயிகள் காய்கறிகள், தென்னை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களில் இப்பகுதியில் சிறுத்தை வந்து சென்றதற்கான தடங்கள் இருந்துள்ளன. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கண்டமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: இரவில் இப்பகுதிக்கு சிறுத்தை வந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்ட பகுதிக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். சில விவசாயிகள் தோட்ட பகுதியில் இரவில் தீ மூட்டியும், பாடல்களை சப்தத்துடன் இடைவிடாமல் ஒலிக்கச் செய்தும் வருகின்றனர். கால்நடைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வனத்துறையினர் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சிறுத்தைகள் உள்ளன. சிறுத்தை இப்பகுதியில் அரிதாகவே இறங்கி வரும் வாய்ப்புள்ளது. இருப்பினும் அப்பகுதியில் ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறினர்.