சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: புலி நடமாட்டம்

ஜனவரி 08,2020



சபரிமலை: அழுதை– பம்பை பாதையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் காட்டு யானைகளை கண்காணிக்க வனத்துறை சிறப்புக்குழு பம்பையில் முகாமிட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன்பு பெருவழிப்பாதையில் முக்குழி அருகே கோவையை சேர்ந்த பக்தர் பத்ரப்பன் என்பவரை யானை மிதித்து கொன்றது. இதனால் பெருவழிப்பாதையில் வனத்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜன.12 எருமேலி பேட்டை துள்ளலுக்கு பின்னர் இவ்வழியில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை தற்போதை விட பல மடங்கு அதிகரிக்கும். இங்கு எட்டு இடங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கமிட்டியின் சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. இங்கு பக்தர்களுக்கான வசதி, பயணம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

பெருவழிப்பாதையில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சிறப்புக்குழுவினர் பம்பை வந்துள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் அழுதை வரை சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்பாடு அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். 18 மணி நேரம் காத்திருப்பு: பெருவழிப்பாதை மற்றும், நிலக்கல் வழியாக பம்பை வரும் பக்தர்கள் 12 முதல் 18 மணி நேரம் வரை கியூவில் நிற்க வேண்டியுள்ளதால் புல்மேடு பாதையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. புல்மேடு வழியாக வருபவர்கள் எங்கும் காத்திருக்காமல் சன்னிதானம் வரமுடியும். இங்கு சிறிது நேர காத்திருப்புக்கு பின்னர் படியேறி தரிசனம் செய்யலாம். புல்மேடு, பாண்டித்தாவளம் பகுதியில் எல்லா சீசனிலும் யானை வரும். ஆனால் இந்த சீசனில் இதுவரை யானை வரவில்லை. எனினும் இங்கு கூடுதல் வனஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புலி நடமாட்டம்: நேற்று முன்தினம் இரவு பாண்டித்தாவளம் அருகே உரல்குழி தீர்த்தம் பகுதியில் இரண்டு புலிகள் நடமாடியதாக, இங்கு பணியில் இருந்த மத்திய அதிவிரைவு படை போலீஸ்காரர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து அங்கு வனத்துறை ஊழியர்கள் விரைந்து சோதனை நடத்தினர். எனினும் புலியை காண முடியவில்லை.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்