எருமேலியில் பேட்டை துள்ளல்

ஜனவரி 11,2020சபரிமலை: கேரள மாநிலம், சபரி மலை மகரஜோதிக்கு முன்னோடியாக, பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல், நாளை நடக்கிறது.

எருமேலியில் மண்டல சீசன் ஆரம்பமானது முதல், பேட்டை துள்ளல் நடந்தாலும், மகரஜோதிக்கு மூன்று நாட்கள் முன் நடக்கும், பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. அம்பலப்புழா, ஆலங்காடு என, இரண்டு பக்தர்கள் குழுவினரின், பேட்டை துள்ளலில் ஈடுபடுவர். நாளை மதியம், 12:00 மணிக்கு, வானத்தில் வட்டமிடும் கருடனை பார்த்தும், அம்பலப்புழா பக்தர்கள், எருமேலி சிறிய சாஸ்தா கோவிலில் இருந்து, பேட்டை துள்ளி வருவர்.வாவர் பள்ளியை வலம் வந்த பின், பெரிய சாஸ்தா கோவிலில் நிறைவு செய்து, பெருவழிப்பாதையில் சபரிமலைக்கு பயணத்தை துவங்குவர். மாலை, 3:00 மணிக்கு, வானில் தெரியும் நடசத்திரத்தை கண்டதும், ஆலங்காடு பக்தர்கள், பேட்டை துள்ளி, பெரிய சாஸ்தா கோவிலில் நிறைவு செய்வர்.மகரஜோதி நாளில் செய்ய வேண்டியவை குறித்து, அதிகாரிகள் கூட்டத்தில், பத்தணந்திட்டாவை கலெக்டர் நுாகு பேசியதாவது:ஜோதி தரிசன மைய அதிகாரிகள், முந்தைய நாளே, அந்தந்த இடங்களுக்கு சென்று குடிநீர், தடுப்புவேலி, ஆம்புலன்ஸ் வசதிகள் குறித்து, உறுதி செய்ய வேண்டும்.அசம்பாவிதம் நடந்தால், கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கும், பேரழிவு நிவாரண தடுப்பு முகாமிற்கும் தெரிவிக்க வேண்டும். திருவாபரணம் கடந்து செல்லும் பாதைகளில், ஜன., 13, 14 தேதிகளில், மதுக் கடைகளை அடைக்க வேண்டும்.

ஜன., 15ம் தேதி காலை முதல், 16ம் தேதி மதியம் வரை, நிலக்கல்லில் இருந்து, தனியார் வாகனங்கள் பம்பை செல்ல அனுமதி கிடையாது. ஜோதி தரிசனம் முடிந்த உடன், பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு, செயின் சர்வீஸ் தொடங்கும். அதன் பின், இரவு, 9:00 மணிக்கு, வெளியூர் பஸ்கள் புறப்பட்டு செல்லும். இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து, 900 பஸ்கள், பம்பை வருகிறது.பம்பை முதல் நிலக்கல் வரை, வாகனங்களை ஒழுங்குப்படுத்த, கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் பேசினார். ஜோதி நாளில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக, சன்னிதானத்தில் அதிகாரிகள் நேற்று கூடி, ஆலோசனை நடத்தினர்.

சபரிமலை 18 படிகளும் அதன் சிறப்பும்!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்