ஜனவரி 15,2024
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம பூஜை இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடைபெற்றது.
சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபணபவனி இன்று மாலை 5:30 -க்கு சரங்குத்தி வந்தடையும். இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். மாலை 6.20 மணி வாக்கில் 18-ம் படி வழியாக ஸ்ரீ கோயில் முன்புறம் வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகரநட்சத்திரமும், தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சிதரும்.
மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் ஐயப்பனுக்கு நடத்தப்படும் இந்த பூஜை இன்று அதிகாலை 2:46 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.இந்த பூஜைக்கு பின்னர் வழக்கமான நெய் அபிஷேகம் கணபதி ஹோமம் உஷ பூஜை போன்றவை நடைபெற்று பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும் அதன் பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் 18 படிகள் ஏறுவதற்கு அனுமதி இல்லை
கடந்த இரண்டு நாட்களாக இங்கு வந்த பக்தர்களில் பெரும்பகுதி பேர் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தை சுற்றியுள்ள காடுகளில் பெட்ஷீட், மரக்கிளைகளால் தற்காலிக ஷெட்டுகள் கட்டி தங்கியுள்ளனர். கட்டடங்கள், மரங்கள் மற்றும் மலை சரிவுகளில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோதி தெரியும் இடங்களில் மூங்கில் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00 மணி முதல் பத்தணந்திட்டை - நிலக்கல்-பம்பை ரோட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து மதியத்துக்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இரவு 8.00 மணிக்கு பின்னர் இவர்கள் மலை ஏறலாம். மகரஜோதி தரிசனம் முடிந்து பக்தர்கள் நிலக்கல் மற்றும் பிற வெளியூர்களுக்கு செல்ல வசதியாக 1200 கேரளா அரசு பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
மகரவிளக்குக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜை நேற்று காலை கணபதிேஹாமத்துக்கு பின்னரும், உச்சபூஜைக்கு முன்னரும் தந்திரி கண்டரரு கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்தினார். கூட்டம் காரணமாக எவ்வித சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வதற்கு போலீஸ், தீயணைப்பு படை உள்ளிட்ட அரசு நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 35 ஸ்டிரச்சர் சர்வீஸ் சன்னிதானம் மற்றும் பம்பையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் நான்கு எஸ். பி., 19 டி. எஸ். பி., 15 இன்ஸ்பெக்டர் உட்பட 1000 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதாக கேரள போலீஸ் டி.ஜி.பி. டாக்டர் ஷேக் தர்வேஷ் சாஹிப் நிருபர்களிடம் தெரிவித்தார்.