நவம்பர் 28,2024
திருப்புல்லாணி; கேதார்நாத்திலிருந்து ராமேஸ்வரம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக ஐயப்ப பக்தர்கள் திருப்புல்லாணி வந்தனர்.
பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்தவர்கள் 12 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழுவினர். கடந்த ஆக., 17 அன்று கேதார்நாத்தில் உள்ள சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து பாதயாத்திரையாக ராமேஸ்வரம் சென்று விட்டு சபரிமலை யாத்திரை துவங்கினர். இருமுடி கட்டி ஐயப்ப குருசாமி அங்குஸ் என்பவர் மூலம் ஐம்பொன் சிலையிலான ஐயப்பன் சிலையை தலையில் சுமந்தபடி சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வந்தனர்.
இது குறித்து குருசாமி அங்குஸ் கூறியதாவது: ஹிந்து மதத்தில் உள்ள சனாதன தர்மத்தை வலியுறுத்தி ஆன்மிக சுற்றுப்பயண பாதயாத்திரை செல்கிறோம். முதலில் 12 ஜோதிர் லிங்கத்தையும் காரில் சென்று தரிசனம் செய்துவிட்டு கடந்த ஆக., 17 அன்று கேதார்நாத்திலிருந்து பாதயாத்திரையாக துவங்கி காசி சென்று புனித நீர் எடுத்து தமிழகம் வந்து திட்டமிட்டபடி நூறாவது நாள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசனம் செய்து கங்கை நீரால் அபிஷேகம் செய்துவிட்டு, திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வந்துள்ளோம். மொத்த பயண தூரம் 4000 கி.மீ., தொலைவிற்கு உரியது. தினமும் 30 முதல் 40 கி.மீ., வரை பாதயாத்திரையாக நடந்து செல்வோம். அதிகாலை 4:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை தொடர் நடை பயணம் மேற்கொள்கிறோம். மதியம் 3 மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் கோயில் சமுதாயக் கூடங்களில் மட்டுமே இரவு தங்குதலை அமைத்துக் கொள்கிறோம். வரக்கூடிய டிச., 10 அன்று சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து கங்கை நீரால் அபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். 12 இளைஞர்களும் ஐ.டி.ஐ., டிப்ளமோ இன்ஜினியர், மருத்துவ பிரிவு உள்ளிட்டவைகளில் வேலை செய்கின்றனர். சனாதனத்தை முன்னிறுத்தி ஆன்மிக பயணம் செய்வது உடலுக்கும், உள்ளத்திற்கும் திருப்தி அளிக்கிறது என்றனர்.