நவம்பர் 30,2024
சபரிமலை; ‘‘சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் இல்லை’’ என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.
சபரிமலையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடை திறந்து, 12 நாட்களில் 9லட்சத்து, 13 ஆயிரத்து, 437 பேர் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலத்தில் 5 லட்சத்து, 53 ஆயிரத்து, 922 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்திருந்தனர். நீண்ட நேர காத்திருப்பு இல்லாமல் தரிசனம் நடத்தி செல்கின்றனர். நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 87 ஆயிரத்து, 992 பேர் தரிசனம் செய்தனர். இதில், ஸ்பாட் புக்கிங் மூலம் வந்தவர்கள், 16,282 பேர். காணிக்கையாக, 63.01 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த சீசனில் இது, 47.12 கோடி ரூபாயாக இருந்தது. 15.89 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் வந்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு வாயிலாக, 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் வாயிலாக, 10,000 பேரும் அனுமதிக்கப் படுகின்றனர். சில சமயங்களில் ஸ்பாட் புக்கிங்கில் கூடுதலாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவை, 80,000மாக அதிகரித்தால், கடந்த ஆண்டு போல பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை, 90,000த்தை கடந்தால், பக்தர்களின் வரிசை, மரக்கூட்டம் என்ற இடத்தை தாண்டி விடும். எனவே, ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக் கும் திட்டம் இல்லை. பம்பையில் ஸ்பாட் புக்கிங்குக்காக ஆறு கவுன்டர்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்வதற்கு பந்தல் அமைக்கப்பட்டுஉள்ளது. பந்தளம் சாஸ்தா கோவிலில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர் துவங்குவது பற்றி ஆலோசிக்கப்படும். தற்போதுள்ள நிலவரப்படி, அதிகபட்சமாக பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் தான் வரிசையில் நிற்கின்றனர். பகல், 1:00 மணி மற்றும் இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அப்போது கடைசி நேரத்தில் படி ஏறும் பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்காத சூழ்நிலையை கருதி, அந்த நேரத்தில் நிற்கும் அனைத்து பக்தர்களும் தரிசிக்க சில நிமிடங்கள் கூடுதலாக நடை திறக்க மேல் சாந்திகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.