பாலக்காடு; பாலக்காடு அருகே புளியல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள கரிங்கரைப்புள்ளி புளியல் பகவதி அம்மன் கோவிலில், மார்கழி மாதம் ஒரு நாள் மட்டும் நடை திறந்து, திருவிழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, இன்று கோவில் நடை திறந்ததும் துவங்கியது. பால்நீரி சிவன் கோவில் மேல்சாந்தி சுரேஷ் பட்டினி தலைமையில் பிம்பசுத்தி நடந்தது. தொடர்ந்து மகா கணபதி ஹோமமும், அதன்பின் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. காலை, 10:00 மணிக்கு ரகு மாரார் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு ‘பஞ்சாரிமேளம் என்ற செண்டை மேளம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடைகள் சூடிய மூன்று யானைகள் அணிவகுக்க, ‘காழ்ச்சசீவேலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, 3:00 மணிக்கு கேரள பாரம்பரிய கலையான ‘ஓட்டன்துள்ளல் நடனம் கோவில் வளாக அரங்கில் நடந்தது. அதன்பின், குளிச்சேரி அனியன் மாரார் தலைமையில் பஞ்சவாத்தியம், குடைவாத்தியம், நாதஸ்வரம், பூக்காவடியுடன் சிங்காரிமேளம் முழங்க, அம்மன் யானை மீது எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.