புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் துவங்குகிறது.
கைலாஷ் - மானசரோவர் யாத்திரை கடைசியாக, 2019-ல் நடந்தது. அதன்பிறகு, கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதல் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது. மானசரோவர் ஏரி, சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் இருப்பதே இதற்கு காரணம். கடந்த அக்டோபரில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்திய - சீன எல்லையில் ராணுவத்தை திரும்பப் பெற இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இதன் தொடர்ச்சியாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை இந்த ஆண்டு மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நம் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், இந்தியா - -சீனா இடையே விமான சேவையை மீண்டும் துவங்க கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. மேலும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் துவங்குவது குறித்தும் இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. எனவே, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை விரைவில் துவங்கப்பட வாய்ப்புள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும், என்றார்.