தஞ்சாவூர், தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் சிலை புற்று மண்ணால் ஆனதாகும். இதனால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறாது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை நடைபெறும். மூலஸ்தான அம்மனுக்கு 48 நாட்களும் 2 வேளை சாம்பிராணி தைலம், புனுகு, ஜவ்வாது உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். தைலக்காப்பின்போது அம்மனுக்கு வெப்பம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதை தவிர்க்க தயிர்பள்ளயம், இளநீர் போன்ற விசேஷ நைவேத்தியங்கள் படைக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தைலக்காப்பு அபிஷேகம் இன்று (18ம் தேதி) தொடங்கியது. ஜூன்.1ம் தேதி வரை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.