திருச்சி; பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி மட்டுவார்குழலம்மை அம்பாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தென்கயிலாயம் என புகழ் பெற்ற திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோயிலில் சித்திரை தேர்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு விழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான இன்று திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கால் மண்டபத்தில் தாயுமானவர்சுவாமி, மட்டுவார்குழலி அம்மையாருடன் எழுந்தருளினார். சிறப்பு யாகங்களைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க தாயுமானவர், மட்டுவார்குழலம்மை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர். தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான தாயுமானசுவாமி தேரோட்டம் 9ம் தேதி காலை நடைபெற உள்ளது.