அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு பொங்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 2 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, இன்று 15 ம் தேதி அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பாரியூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மனை அழைத்தல் நிகழ்சி நடந்தது. பின்னர் பொங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, நூற்று கணக்கான பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து, காலை 11 மணிக்கு ரத ஆரோகணம், மாலை 4 மணிக்கு ரத உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. 17 ம் தேதி இரவு 9 மணிக்கு அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா செல்லுதல். தொடர்ந்து வள்ளி கும்மி மற்றும் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைப்பெறுகிறது. 18 ம் தேதி இரவு 9 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா செல்லுதல், 19 ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 20 ம் தேதி காலை மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.