காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஆகாய கன்னியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா இன்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில், செங்குந்தர் குடும்பத்தாரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடித் திருவிழா இன்று காலை 9:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும், பிற்பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆகாய கன்னியம்மன் வீதியுலா வந்தார். இரவு 9:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடக்கிறது.