திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த, 22ம் தேதி முதல், 28ம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. விழா ஒட்டி, காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு காலை, 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. வரும், 27ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, உற்சவர் சண்முகப்பெருமானுக்கு புஷ் பாஞ்சலி நடக்கிறது. வரும், 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது. இந்நிலையில், கந்த சஷ்டி விழா ஒட்டி நேற்று முதல் நாளை மறுநாள் வரை மூலவர் முருகப்பெருமானுக்கு காலை, 9:00 மணி முதல் நண்பகல், 11:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. இதனால் இரண்டு மணி நேரம் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.