நவம்பர் 16,2025
பொள்ளாச்சி: ஐயப்பன் பக்தர்கள், சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் துவக்க உள்ள நிலையில், கோவில்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படவுள்ளது. ஆண்டுதோறும், தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாளன்று, ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்ல மாலை அணிவர். பின்னர், ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு, இருமுடி கட்டி கோவிலுக்குச் செல்வது வழக்கம். அதன்படி, இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்பன் சுவாமி கோவிலில், அதிகாலை, நடை திறப்பு, கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள், சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதத்தை துவக்குகின்றனர். ஐயப்ப சுவாமி கோவிலில் குருசாமியிடம் மாலை அணிகின்றனர். சபரி மலை சீசனையொட்டி, பொள்ளாச்சியில் உள்ள கடைகளில், சந்தனம், ருத்ராட்சம் மற்றும் துளசி மாலை, காவி, நீலம், கருப்பு நிறத்திலான வேட்டி, துண்டு விற்பனை அமோகமாக இருந்தது.