டிசம்பர் 03,2025
சபரிமலை; மலையேறிவரும் பக்தர்களுக்கு கால் வலி ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு சபரிமலையில் இலவச பிசியோதெரபி வழங்கப்படுகிறது.
பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். இதில் மூன்று கிலோ மீட்டர் செங்குத்தான மலையாகும். இவ்வாறு மலையேறும் போது பக்தர்களுக்கு காலில் சுளுக்கு, உடல் வலி போன்றவை ஏற்படுகிறது. இவற்றுக்கு ஆறுதலாக சன்னிதானத்தில் இலவச பிசியோதெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியன்பிசியோதெரபிஸ்ட் சங்க மும், பத்தனம்திட்டை மறுவாழ்வு பாதுகாப்பு மையமும் இணைந்து இந்தபிசியோதெரபி மையத்தை செயல்படுத்துகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிகிச்சை பெறுகின்றனர். முதுகு வலி, கால் மூட்டு வலி, உடல் வலி, சுளுக்கு பிடி போன்றவற்றுக்கு இங்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களுக்கு வலி உடனடியாக நீங்கி மலை இறங்குவதற்கு வசதியாக உள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.