டிசம்பர் 10,2025
சபரிமலை: சபரிமலையில் உச்சபூஜைக்கு முன்னோடியாக களப பவனி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
22 நாட்களில் 95 பாம்புகள் பிடிபட்டன; சபரிமலையில் மண்டல காலம் தொடங்கி 22 நாட்கள் கடந்த நிலையில் சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து 95 பாம்புகள் பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் சரணாலய உட்காட்டுக்குள் விடப்பட்டுள்ளன. பாம்புகளை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட ஆறு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாம்பு பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்த ஆண்டு பிடிக்கப்பட்ட பாம்புகள் விஷத்தன்மை குறைந்தவை என்று பாம்பு பிடி நிபுணர் குழுவின் தலைவர் பைஜூ கூறினார். 15 பாம்புகள் மட்டுமே சற்று கூடுதல் விஷத்தன்மை கொண்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். கடந்த மண்டலகால சீசனில் 365க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்ததாக அவர் கூறினார். சீசன் அல்லாத நேரங்களிலும் இங்கு பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆறு மாதங்களுக்கு முன் சன்னிதானத்திலிருந்து நான்கு ராஜ வெம்பாலா பாம்புகள் பிடிக்கப்பட்டு உட்காட்டுக்குள் விடப்பட்டதாக அவர் தெரிவித்தார். பக்தர்கள் பாம்பை கண்டால் அவற்றை தாக்கவோ அல்லது பிடிக்கவோ முயற்சி செய்யக் கூடாது. உடனடியாக பக்கத்தில் உள்ள போலீஸ் அல்லது வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். பக்தர்கள் வழக்கமாக பயன்படுத்தும் பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். புல் வளர்ந்த பகுதிகளில் செல்லக்கூடாது.பாம்பு கடி ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க சன்னிதானம் மற்றும் பம்பை மருத்துவமனையில் போதுமான மருந்து இருப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.