ஜனவரி 12,2026
சபரிமலை: மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பவனி, பந்தளத்திலிருந்து இன்று புறப்பட்டது.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. பந்தளத்திலிருந்து திருவாபரண பவனி இன்று மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டது. பந்தளம் அரண்மனையில் உள்ள திருவாபரணங்கள் இன்று அதிகாலை முதல் பந்தளம் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜை நடைபெற்று, பேடகங்கள் அடைக்கப்பட்டு தலை சுமடாக பவனியாக புறப்பட்டது. இது 14ம் தேதி மாலை சன்னிதானம் வந்தடையும். மகரஜோதிக்கு முன்னோடியாக சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் சுத்தி கிரியைகள் இன்று தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் பிராசாத சுத்தி பூஜைகளை தந்திரி மகேஷ் மோகனரரு நடத்துவார். நாளை மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.