மேட்டுப்பாளையம்; காந்தவயல் மேலூரில் உள்ள பகவதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது.
சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் காந்தவயல் மேலூரில், பகவதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 19ம் தேதி கம்பம் நடப்பட்டது. 22ம் தேதி கிராம சுவாமிகள் அழைக்கப்பட்டன. இன்று காலை ஆற்றில் இருந்து அம்மன் சுவாமி அழைத்துவரப்பட்டது. அதன் பின், குண்டம் இறங்கும் வைபவம் நடந்தது. ஊர் தலைவர் ரங்கசாமி, குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து, முதலில் இறங்கினார். அதைத் தொடர்ந்து கோவில் பூசாரி குஜ்ஜன் மற்றும் பூசாரிகள், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் என திரளானவர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள், வனப்பூக்கள் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் செய்திருந்தனர்.