மதுராந்தகம்: மொறப்பாக்கத்தில் வீரபாஞ்சாலி அம்மனுக்கும் விஜயனுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் வீரபாஞ்சாலி திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மஹா-பாரத திருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி கணபதி ஹோமம், கங்கை பூஜை, காப்பு கட்டுதல், அபிஷேக, ஆராதனையுடன் துவங்கியது. விழா துவங்கியது முதல் 18 நாட்களுக்கு மாலையில் மஹாபாரத சொற்பொழிவும், கடந்த 1ம் தேதி முதல் 11 நாட்கள் இரவில், கரசானுார் செந்தில் குமரன் நாடக கலைக்குழுவினரின் மஹாபாரத இதிகாச நாடகங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், பிரதான நிகழ்வான, வீர பாஞ்சாலி என்று போற்றப்படும் திரவுபதி அம்மன் மற்றும் வில் விஜயன் என்று போற்றப்படும் அர்ச்சுனன் இடையேயான திருக்கல்யாணம் நடந்தது. இதில், வீர பாஞ்சாலி அம்மனுக்கும், வில் விஜயனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, ஹோமம் வளர்த்து, மாலை மாற்றி, பூஜை செய்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், மொறப்பாக்கம், கழனிப்பாக்கம் கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள், சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து, திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.