மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது



மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. செப்.,17 கும்பாபிஷேகம் வரை இங்கு அம்மன், சுவாமி மூலவர்களை கும்பவடிவில் தரிசிக்கலாம்.


மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடக்கிறது. அன்று காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை 7:55 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், காலை 8:10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று கும்பாபிஷேக சடங்குகளில் பங்கேற்கும் சிவாச்சாரியர்களுக்கு பொற்றாமரைக்குளத்தில் ஆச்சார்ய ஸ்நானம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை வேத மந்திரம் முழங்க துவங்கியது. முன்னதாக மாலை 4.30 மணிக்கு விக்னேச்வர பூஜை


புண்யாஹவாசனம் (புனித நீர் தெளித்தல்) கும்பாலங்காரம் (திருக்குட வழிபாடு) நடைபெற்றது. தொடர்ந்து இறை சக்தியை திருக்குடத்தில் எழுந்தருளச் செய்யும் கலாகர்ஷணம் மற்றும் யாகசாலை ப்ரவேசம், கடஸ்தாபனத்தை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முதற்கால வேள்வி பூஜையை துவங்கினர். யாகசாலை வேள்வி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.


184 யாக குண்டங்கள்; கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், 56 யாக சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. கோவிலில் உள்ள 514 சுவாமிகளுக்கு தேவையான சிறிய, பெரிய பித்தளை கலசங்களால் நீர் நிரப்பப்பட்டுள்ளன.  கலசத்தில் நீர் நிரப்புவதற்காக காசியில் புண்ணிய நதியான கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் வந்துள்ளது. அதே போன்று 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.  இது தவிர 9 வகையான தானியங்கள், மூலிகை பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் என 96 வகையான ஹோம பொருட்கள் மூலம் யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன.  தினமும் யாக வேள்வி நடக்கிறது. செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கோயிலின் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்