திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் காப்பு கட்டி 6 நாட்கள் கோயில் வளாகம், மண்டபங்களில் உள்ள சஷ்டி மண்டபங்கள், முன் பகுதி காலியிடங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர்.
இவர்களுக்கு வசதியாக பூங்கா பஸ் நிறுத்தம் அருகே கோயில் சார்பில் ரூ. 4.50 கோடியில் புதிய சஷ்டி மண்டபம் கடந்தாண்டு கட்டி, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் 300க்கும் மேற்பட்டோர் தங்கி விரதம் இருக்க முடியும். இம்மண்டபம், கோயிலில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ளது.
சஷ்டி விரதம் மேற்கொள்வோர் தினமும் இருவேளை சரவணப் பொய்கையில் நீராடுவர். பின் கிரிவலம் சென்று மண்டபம், கோயிலில் தங்குவர். அவர்கள் கிரிவலம் முடித்து, புதிய மண்டபத்திற்கு செல்லும் போது ஆபத்தான நிலையில் ரயில்வே தண்டவாளங்களை கடக்க வேண்டியுள்ளது.
ரயில்வே தண்டவாளங்களை தவிர்க்க நினைத்தால், மேம்பாலத்தில் ஏறி ஹார்விபட்டிவரை சென்று, பின்பு சஷ்டி மண்டபத்திற்கு திரும்ப நடந்து வரவேண்டும். இதற்கான தொலைவு அதிகம். எனவே, பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவர். மேலும் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்வோருக்கு தினமும் தினை மாவு, எலுமிச்சம் பழச்சாறு, பால் பிரசாதம் வழங்கப்படும்.
இவை சஷ்டி மண்டப பக்தர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. எனவே, விரத பக்தர்கள் புதிய சஷ்டி மண்டபத்தில் தங்க தயக்கம் காட்டுவர். இதனால் புதிய சஷ்டி மண்டபத்திற்கு எளிதாக சென்று திரும்ப பேட்டரி கார் வசதி, தினை மாவு, எலுமிச்சம் பழச்சாறு, பால் உள்ளிட்ட பிரசாதம் புதிய சஷ்டி மண்டபத்திலும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.