பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தங்கரதத்தில் ரூ.56 லட்சம் மதிப்பில் 22 கிலோ எடையில் புதிதாக வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்டு நேற்று இரவு சுவாமி புறப்பாடு நடந்தது.
இக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு நடக்கும் தங்கரத புறப்பாடு நவராத்திரி விழாவை முன்னிட்டு அக்.,11 முதல் 20 வரை நடக்கவில்லை. இந்நேரத்தில் தங்க ரதத்தில் பழுதடைந்த வெள்ளித்தடுகளை நீக்கிவிட்டு புதிய தகடுகள் பொருத்தப்பட்டன. ரதத்தில் வலது பக்க குதிரையின் வலது காலில் புதிய தகடுகள் இணைத்து சரி செய்யப்பட்டது. உபயதாரர் மூலம் ரூ.56 லட்சம் மதிப்பில் 22 கிலோ வெள்ளியை பயன்படுத்தி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய மின்சாதனங்களும் பொருத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று இரவு கோயில் வெளிப்பிரகாரத்தில் தங்கரத புறப்பாடு நடந்தது. ரதத்தில் எழுந்தருளிய சின்னக்குமார சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.