விருத்தாசலம்: வனதுர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில், பெரிய அய்யனார், சின்ன அய்யனார் மற்றும் வன துர்க்கை அம்மனுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன், முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது.
தொடர்ந்து, நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 9:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. வேத விற்பன்னர்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து சென்று, பெரிய அய்யனார், சின்ன அய்யனார், வன துர்க்கை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. தொடர்ந்து, மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
கொட்டும் மழையிலும் நனைந்தபடி ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், கோபாலபுரம் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.