மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஈ.வெ.ரா.,சிலையை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம.ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் முன்பகுதில் அதற்கு சொந்தமான நிலம் உள்ளது. அறநிலையத்துறையின் அனுமதியின்றி ஈ.வெ.ரா., சிலை நிறுவப்பட்டுள்ளது. இது பக்தர்களின் மத உணர்வை அவமதிக்கும் வகையில் உள்ளது. சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள ஈ.வெ.ரா., சிலை, கம்யூனிஸ்ட் கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி அறநிலையத்துறை முதன்மை செயலர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தஞ்சாவூர் மாவட்ட தி.க.,தலைவர் அமர்சிங் தன்னையும் இவ்வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து கருத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு செய்தார். ஏற்கனவே விசாரணையின்போது கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை: கண்டியூரில் சர்க்கார் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் சிலை அமைந்துள்ளது. கிராம கணக்குகளான அ பதிவேடு மற்றும் அடங்கல் குறிப்புரை பகுதியில் கோயில் எனவும் ‛பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிலை 1990 ல் சாலையோரத்தில் நிறுவப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கப் பணியின்போது சிலை இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் அமைக்கப்பட்டது. கண்டியூர் ஊராட்சி வெள்ளாளர் தெரு கிளை நுாலகம் அருகில் சிலையை இடமாற்றம் செய்ய தி.க.,வை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அது ஊராட்சிக்கு சொந்தமான பொது இடம். பொது இடத்திற்கு மாற்ற முடியாது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி சிலைகள், கொடிக்கம்பங்கள், நினைவுச் சின்னங்களை எந்த ஒரு பொது இடத்திலும் இடமாற்றம் செய்து நிறுவ முடியாது. கோயிலுக்கு வெளியே அச்சிலையை நிறுவ மாற்று இடம் இல்லை. தி.க.,வினர் அச்சிலையை அவர்கள் விரும்பும் தனியார் நிலத்திற்கு இடமாற்றம் செய்ய முன்வர சம்மதம் தெரிவிக்கவில்லை இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜஸ்வந்த் ஆஜரானார். தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை கமிஷனர்,‛ அனுமதியின்றி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது,’ என அறிக்கை தாக்கல் செய்தார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அதன் நிர்வாகம் மற்றும் கலெக்டரின் அனுமதியின்றி சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை 4 வாரங்களில் பாதுகாப்பாக அகற்றி மாற்று இடத்தில் நிறுவ கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.