காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது. கூடை கூடையாக பல்வேறு வகையான பூக்களை கொண்டு அம்மனுக்கு கொட்டி புஷ்பாஞ்சலி செய்து வழிபாடு ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் காமாட்சி அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்ததாக ஐதீகம். அந்தவகையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை முதல் அபிஷேகம் ஆராதனை நடைபெற்று ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து இரவு காமாட்சி அம்மன் வைர வைடூரிய மாலைகள் சாற்றப்பட்டு, வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு குளக்கரையில் உள்ள பூர மண்டபத்தில் வெள்ளி பத்ராபீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது புஷ்பாஞ்சலி சேவை செய்யப்பட்டது. இதில் கூடை கூடையாக புஷ்பங்களைக் கொண்டு வந்து அம்பாளுக்குச் சார்த்தினார்கள். ரோஜாப்பூ, மல்லிப்பூ, மஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, செண்பகப்பூ, பல வண்ண நிற பூக்களை வைத்து புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.