புட்டபர்த்தியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு; ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்பு | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

புட்டபர்த்தியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு; ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்பு


புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று பகவான் பாபாவிற்கு மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.




பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு நிகழ்ச்சிக்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று புட்டபர்த்தி வருகை தந்தார். அவரை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்று அழைத்துச்சென்றார். தொடர்ந்து அவர் புட்டபர்த்தியில் உள்ள பாபாவின் மகா சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார். அவருக்கு வேத ஆசிர்வாதம், சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பங்கேற்றார். தொடர்ந்து பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் சிறப்பு அமர்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். 


அப்போது திரவுபதி முர்மு பேசியதாவது: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடிக்கணக்கான பேர் சேவையில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தார். மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று அவர் பணியாற்றினார். தன்னலமற்ற சேவையில் ஈடுபடும்படியும், ஆன்மிகத்தை பொது மக்கள் நலனுக்கு பயன்படும் வகையில் பணியாற்றுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.


அகிம்சை, அமைதி: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் அவரது துாண்டுதலால் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர் என்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. அவரது போதனைகள், எக்காலத்துக்கும் மனித குலத்துக்கு பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும். உலகமே ஒரு கல்விக்கூடம். அதில், உண்மை, அன்பு, நன்னடத்தை, அகிம்சை, அமைதி ஆகிய ஐந்தும் தான் பாடத்திட்டம் என்று அவர் மனதார நம்பினார். இவ்வாறு அவர் பேசினார். ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் எனக் கூறி, திரவுபதி முர்மு உரையை நிறைவு செய்தார். விழா நிறைவாக தேசிய கீதத்தைத் தொடர்ந்து மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது.