சபரிமலையைப் போல் 10 நாள் மண்டலபூஜை, ஆறாட்டு, பேட்டை துள்ளல், சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி பூஜை, மகரஜோதி, சித்திரை விஷு, வருடாபிஷேகம், பங்குனி உத்திரம், ஆங்கில வருடப்பிறப்பு, நவராத்திரி.
தல சிறப்பு:
இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படுவதும் தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 12 மணி வரையும் திறந்திருக்கும்.
இங்கு வல்லபை விநாயகர், வல்லபை அம்மன் (மஞ்சமாதா), வல்லபை சங்கரர், சங்கரி, வலியகடுத்த சுவாமி, கருப்பன், கருப்பி சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும் தியான மண்டபம், அன்னதான மண்டபம், மடப்பள்ளி போன்றவையும் உள்ளன. இங்குள்ள தியான மண்டபத்தில் உற்சவ மூர்த்தியும், சிவபெருமானும் அருள்பாலிக்கின்றனர். கோயில் பின்புறம் சபரிமலையைப் போல பஸ்மக்குளம் உள்ளது. மூலவருக்கு வலதுபுறத்தில் விநாயகரும், முருகப்பெருமானும், இடதுபுறம் மஞ்சமாதாவும் காட்சி தருகின்றனர்.
பிரார்த்தனை
கல்வி, குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழிலில் சிறக்கவும், திருமண தடையுள்ள பெண்கள் மாளிகைப்புறத்தம்மனுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத் துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், எடைக்கு எடை உணவுப்பொருள் அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
தலபெருமை:
சபரிமலையைப் போலவே காப்பு கட்டுதலுடன் 10 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக பேட்டை துள்ளல், ஆறாட்டு போன்றவை இங்கு தான் நடைபெறுகின்றன. ஆறாட்டின் போது கருடன் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். பின்னர் மகா அன்னதானமும் அதனைத் தொடர்ந்து சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது. சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி குத்துவிளக்கு பூஜை இங்கு விசேஷம். ஆங்கில மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இங்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை முதல் தேதி அன்னதானத்திற்காக பற்றவைக்கப்படும் அடுப்பு மகரஜோதி விழா முடியும் நாள் வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதும் ஓர் அற்புதம்.
இங்குள்ள மூலவருக்கு முன்னால் தத்வமஸி என்று எழுதப்பட்டிருக்கும். மூலவரைப் போலவே உற்சவ மூர்த்தியும் இருப்பது கூடுதல் சிறப்பு. இவ்விரு விக்ரகங்களும் சென்னை பரங்கிப் பேட்டையிலும், மற்ற விக்ரகங்கள் காஞ்சி சங்கராபுரத்திலும் வடிவமைக்கப்பட்டவை. கார்த்திகை, மார்கழியில் தினமும் இங்கு கணபதி ஹோமம் நடைபெறும். மற்ற மாதங்களில் சனிக்கிழமை மட்டும் கணபதி ஹோமம் நடைபெறும். கைகளிலும், கால்களிலும் சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு ராமேசுவரத்திற்கு பாதயாத்திரையாக வந்த சங்கிலி சித்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தவம் இருந்த இடம். அரசமரம், ஆலமரம், இத்திமரம் மூன்றும் மும்மூர்த்திகளாக இத்திருத்தலத்தில் இருப்பது சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. இக்கோயில் வளாகத்தில் எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. பக்தர்கள் ரூ.1 நன்கொடையாக கொடுத்தாலும் ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்திட ஆலயத்தின் உள்ளே தியான மண்டபம் உள்ளது. தினசரி மூன்று கால பூஜை நடைபெறுகிறது. பூஜை வேளைகளின் போது ஏதேனும் ஒரு பூஜையிலாவது ஸ்ரீஐயப்பன் கருடனாக வந்து வானத்தில் வட்டமிடுவதைக் காண கண்கோடி வேண்டும்.
தல வரலாறு:
இங்குதான் ரகுநாத சேதுபதி இந்திரனை யாகம் வளர்த்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. அவர், வழிபட்டு வந்த ஊரணிக்கரையில் தான் வல்லபை ஐயப்பன் திருக்கோயில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. சேதுபதி மன்னர் யாகம் வளர்த்து ஆன்மீகத்தை காத்த இந்த ரகுநாதபுரத்தில் கோயிலின் தோற்றம் சபரிமலை சன்னிதானத்தை போன்றே அமைக்கப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இக்கோயில் அமைவிடத்தில் சிறிய விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்துள்ளன. ராமநாதபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் சந்தக்கடை தெருவில் மிகப்பழமையான வல்லபை விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. முருகன் வதம் செய்த சூரனின் தங்கையின் பெயர் வல்லபை என்பதாகும். சூரனின் வதத்திற்குப் பிறகு முருகனை அழிக்க வல்லபை சிவனிடம் கணக்கில் அடங்கா அசுரர்களைப் பெறும் வரத்தை வாங்கியிருந்தாள். வல்லபையின் கோபத்தை விநாயகர் தடுத்து நிறுத்தி அவருக்கு அருள்பாலித்தார். இதற்கு பிறகு அவருக்கு வல்லபை விநாயகர் எனப்பெயர் ஏற்பட்டது. அவரது திருப்பெயராலே ரெகுநாதபுரத்தில் உள்ள விநாயகரும் வல்லபை விநாயகர் என அழைக்கப்படுகிறார். இங்குதான் ஐயப்பன் ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டு 2005ம் ஆண்டு சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. வல்லபை விநாயகரின் பெயராலே இங்குள்ள ஐயப்பனும் வல்லபை ஐயப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படுவது தலத்தின் சிறப்பு.
இருப்பிடம் : ராமநாதபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 9 கி.மீ. பெரிய பட்டணம் விலக்கு உள்ளது. அங்கிருந்து தெற்கே 5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.