Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சோழீஸ்வரர்
  அம்மன்/தாயார்: பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி
  ஊர்: குத்தாலம்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி பவுர்ணமி, மாசி மகம், கார்த்திகை, பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  தேவார வைப்புத்தலங்களில் இதுவும் ஒன்று. சுயம்புவாக தோன்றிய பாதாள சனீஸ்வரர் அமிர்த கலம் ஏந்தி அருள்பாலிப்பது சிறப்பு. இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம், நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 94435 64607, 94878 83734. 
    
 பொது தகவல்:
     
  இங்கு விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, நால்வர், அக்னி, பாதாள சனீஸ்வரர், துர்கை, கஜலட்சுமி, நாகர், நந்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நிச்சயதார்த்தம் செய்த பிறகு, பிரச்னையின்றி திருமணம் நடக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். தீ தொடர்பான பணியில் இருப்பவர்கள் ஆபத்து வராமல் இருக்கவும், உஷ்ணத்தால் நோய் ஏற்பட்டவர்கள் நிவர்த்திக்காகவும் இங்கு வழிபடுகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாமிக்கு திராட்சை சாறு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

சனிதோஷ பரிகாரம் : சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட நளமகாராஜன், நிவர்த்திக்காக சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று, சுவாமியை வழிபட்டான். அவன் இத்தலம் வந்தபோது, இங்கிருந்த பாதாள சனீஸ்வரரையும் வணங்கி, தனக்கு அருளும்படி வேண்டினான். சனீஸ்வரர் அவனிடம் திருநள்ளாறு தலத்தில் தோஷ நிவர்த்தியாகும் என்று கூறியருளினார். மகிழ்ந்த நளன், திருநள்ளாறு சென்று தோஷ நிவர்த்தி பெற்றான். சனி தோஷ பரிகார தலமான இங்கு சனிப்பெயர்ச்சியன்று பரிகார மகா யாகம் நடக்கும். சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இவரை வழிபட்டு வரலாம்.

அமிர்த கலச சனீஸ்வரர் : மகரிஷிகள், தேவர்கள் சிவனை வழிபட்ட தலம் இது. இவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, சனீஸ்வரர் அவர்களை கையில் அமிர்த கலசம் ஏந்தி வரவேற்றாராம். இந்த அமைப்பிலேயே காட்சி தருவதால் இவர் அமிர்த கலச சனீஸ்வரர் என்றும், பாதாளத்திலிருந்து சுயம்புவாக தோன்றியதால், பாதாள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

நிச்சயம் நிச்சயம் : பரதமகரிஷி தன் மனைவியுடன் ஆஸ்ரமம் அமைத்து சிவனை வழிபட்டு வந்தார். புத்திரப்பேறு இல்லாத அவர், அம்பிகையே தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டுமென விரும்பினார். தன் கோரிக்கை நிறைவேற சிவனை வேண்டி ஒரு யாகம் நடத்தினார். அவரது வேண்டுதலை, ஏற்ற சுவாமி, யாகத்தில் அம்பிகையை தோன்றச் செய்தார். மகிழ்ந்த மகரிஷி, குழந்தைக்கு பரிமளசுகந்தநாயகி எனப்பெயரிட்டு வளர்த்தார். அவள் மணப்பருவம் அடைந்தபோது, சிவனிடம் திருமணம் செய்து கொள்ளும் படி வேண்டினார். சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். மகரிஷியிடம் முறைப்படி பெண் கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இத்தலத்தில் நடந்தது. இதனால் இத்தலத்தை நிச்சயதார்த்த கோயில் என்று அழைக்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நிச்சயதார்த்தம் செய்த பிறகு, பிரச்னையின்றி திருமணம் நடக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

தீ விபத்து நடக்காமல் இருக்க பிரார்த்தனை : இத்தலத்தில் சிவபெருமான் அக்னி சொரூபமாக காட்சி தருவதால், தீ தொடர்பான பணியில் இருப்பவர்கள் ஆபத்து வராமல் இருக்கவும், தீ விபத்தைச் சந்தித்தவர்கள் மன நிம்மதிக்காகவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்க உடலில் குறிப்பிட்ட உஷ்ணம் அவசியம். உடலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் உடல் நலக்குறைவு ஏற்படும். இவ்வாறு உஷ்ணத்தால் நோய் ஏற்பட்டவர்கள் நிவர்த்திக்காகவும் இங்கு வழிபடுகிறார்கள்.

சொன்னவாறு அறிவார் : பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை அவர்கள் சொன்னபடி அறிந்து நிறைவேற்றி வைப்பவர் என்பதால் இத்தலத்து சிவனை சொன்னவாறு அறிவார் என்றும் அழைக்கிறார்கள்.

பரிந்துரைத்த அம்பிகை : பரத மகரிஷி, குழந்தை பாக்கியம் வேண்டியபோது, பார்வதி தேவி, அவருக்கு அருள்புரியும்படி சிவனிடம் பரிந்துரைத்தாள். மனைவியின் சொல் கேட்ட சிவன், அவளையே மகரிஷியின் மகளாகப் பிறக்கும்படி செய்தார். இதனால் இவளை பரிந்துரைத்த நாயகி என்றும் அழைக்கின்றனர். யாகத்தில் தோன்றிய அம்பிகை பரிமளசுகந்தநாயகியாக ஒரு சன்னதியில் இருக்கிறாள். இவள் திருமணத்திற்கு முந்தைய கோலத்தில் கன்னிப்பெண்ணாக காட்சியளிக்கிறாள். பிரதான சன்னதியில், சிவனை மணந்து கொண்ட சவுந்தரநாயகி இடது கையை இடுப்பில் வைத்து, ஆனந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவளது சிலையில் மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.

திராட்சை சாறு அபிஷேகம் : இப்பகுதியை ஆண்ட விக்கிரமசோழனின் மனைவி கோமளைக்கு ஒருசமயம் தோல் வியாதி ஏற்பட்டது. இதற்காக பல வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. வருந்திய மன்னன் மனைவியுடன் இங்கு வந்து, சிவனை வழிபட்டான். மகாராணியின் நோய் நீங்கியது. மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தான். இவனது பெயரால் சுவாமிக்கு சோழீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இப்பெயரே நிலைத்துவிட்டது. தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாமிக்கு திராட்சை சாறு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

தாமரைப்பூ ஆஞ்சநேயர் : ஆஞ்சநேயர் இத்தலத்தில் சோழீஸ்வரரை வழிபட்டுள்ளார். இதை குறிக்கும்விதமாக சுவாமி சன்னதி கோஷ்டத்தில் ஆஞ்சநேயர் கையில் தாமரையுடன் சிவபூஜை செய்யும் சிற்பம் உள்ளது. அருகில் நந்தியும் இருக்கிறது. தவிர, இங்குள்ள ஒரு தூணிலும் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட்டால், சனீஸ்வரரால் உண்டாகும் தீய பலன்கள் குறையும். சனி பெயர்ச்சியால் உண்டாகும் கெடுபலன் குறைய, இங்கு ஒரே சமயத்தில் ஆஞ்சநேயர், அனுக்கிரகம் செய்யும் சனீஸ்வரர் என இருவரையும் தரிசிப்பது விசேஷம்.

பஞ்ச தரிசனம் : கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சோழீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். இந்நாட்களில் சுவாமி காவிரி நதிக்கரைக்கு எழுந்தருளுவார். கடைசி ஞாயிறன்று புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். அன்று சோழீஸ்வரர், உத்வேதீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்களில் உள்ள பஞ்சமூர்த்திகளும், இவ்வூரிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கருட வாகனத்திலும் காவிரிக்கரைக்கு எழுந்தருளுவர். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

பரிகாரத் துளிகள் : சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. குழந்தை பாக்கியம் கிடைக்க பரிமளசுகந்தநாயகியையும், திருமண பாக்கியத்திற்கு சவுந்தரநாயகியையும் வழிபடுகிறார்கள். சிவன் சன்னதி கோஷ்டம் தவிர பிரகாரத்திலும் ஒரு தட்சிணாமூர்த்தி இருக்கிறார். வைகாசி பவுர்ணமி, மாசி மகம் நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். இந்நாளில் சோழீஸ்வரரைத் தரிசிப்பது விசேஷ பலன் தரும். சனீஸ்வர பரிகார தலமென்பதால், இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. இங்கு ஓடும் காவிரி நதி துருத்திக்கொண்டு (முனைப்பான வேகத்துடன்) ஓடுவதால் தலத்திற்கு, திருந்துருத்தி என்றும், சிங்கு நீர் திருத்துருத்தி என்றும் பெயர்கள் உண்டு. கி.பி. 12ம் நூற்றாண்டில் ஜெய்தா பல்லவராயர் என்ற சிற்றரசர் இக்கோயிலை விரிவுப்படுத்திக் கட்டியுள்ளார்.

 
     
  தல வரலாறு:
     
  இறைவனை வேண்டி நாம் நடத்தும் யாகங்களின் பலனை அக்னி பகவான் மூலமாக அவிர்பாகமாகக் கொடுக்கிறோம். இவ்வேளையில் அக்னி பகவானை போற்றுகிறோம். அதேசமயம், நெருப்பால் சில பொருட்கள் அழியும்போது, அவரை தூற்றுகிறோம். அழிவின்போது பழிச்சொல்லுக்கு ஆளாவதால் வருந்திய அக்னிபகவான், அதிலிருந்து விடுபட சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தாமே அக்னியாக இருப்பதாகவும், தனது வேலையையே அவர் செய்வதாகவும் கூறினார். மேலும், அக்னியால் நிகழும் நன்மை, தீமைகளுக்கு தானே காரணகர்த்தாவாக இருப்பதாகவும் சொல்லி அவரை ஆற்றுப்படுத்தினார், பின், அவரது வேண்டுதலுக்காக லிங்கமாக எழுந்தருளி, அக்னீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இத்தலத்தின் விருட்சமான உத்தால மரத்தின் பெயரால் அழைக்கப்பட்ட தலம், பிற்காலத்தில் குத்தாலம் என மருவியது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தேவார வைப்புத்தலங்களில் இதுவும் ஒன்று. சுயம்புவாக தோன்றிய பாதாள சனீஸ்வரர் அமிர்த கலம் ஏந்தி அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar