பிரம்மோற்சவம், ராம நவமி, புரட்டாசி மாதம் சனி, பங்குனி உத்திரம், சித்திரை தமிழ் வருட பிறப்பு, கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாதம், திருவாதிரை, மாசி மகம், தை மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மரகதவள்ளி தாயார் உள்புறப்பாடு.
தல சிறப்பு:
அனுமன் சன்னதியின் மேல் அவரது அப்பா வாயுவின் வாகனமான மான் இருப்பது வித்தியாசமானது. வியாக்கரபாதர் மற்றும் பஞ்சபாண்டவருக்கு தனி சன்னதி உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில்
பெருமாள் கோவில் தெரு, பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம், பெரம்பலூர்-621212.
பொது தகவல்:
ஐந்து நிலை ராஜகோபுரம் சமீபத்தில் குடமுழுக்கு கண்ட சந்தோஷத்தில் பிரகாசமாகக் காட்சிதருகிறது முன்னால் இருக்கும் பெரிய தீபஸ்தம்பத்தின் கீழ் சிறிய திருவடியான அனுமனைப் பார்க்கமுடிகிறது. பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதிகளைக் கண்டு, முகப்பு மண்டபம் கடந்து, ஜெய விஜயர்கள் அனுமதி பெற்று கருவறை சென்றால், மதனகோபாலரின் மனம் கவர் தரிசனம் கிடைக்கிறது. பஞ்சபாணம் தாங்கிய மன்மதனாக சிலகாலம் இருந்ததாலோ என்னவோ தரிசித்ததுமே நம் நெஞ்சம் கவர்ந்து விடுகிறார் எம்பெருமான்.
மலர்மடந்தையும் மண்மடந்தையும் உடனிருக்க மூலவராகவும்,உற்சவராகவும் காட்சி தரும் தரிசனம் உள்ளம் நிறைகிறது.
தும்பிக்கை ஆழ்வார் தொடங்கி, ஆழ்வாராதிகள் வரை அத்தனை பேருக்கும் சன்னதிகள் இருக்கின்றன. ஹயக்ரீவர், நரசிம்மர், பாமா, ருக்மணி சமேத வேணுகோபாலர், ஆண்டாள், தன்வந்திரி, ஸ்ரீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார். சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், கோதண்டராமர், கஜலட்சுமி சன்னதிகளோடு கூத்தனூர் சரஸ்வதிக்கும், கல்யாண விநாயகருக்கும் சன்னதிகள் இருப்பது வித்தியாசமானது. புலிவடிவில் இங்கு வலம் வந்த வியாக்ரம ரிஷி புலிக்காலுடன் விமானத்தில் சுதைவடிவிலும், சாபம் நீங்கிய முனிவராக கற்சிலை வடிவில் பிராகாரத்திலும் காட்சியளிக்கிறார். பாண்டவர்களுக்கும் சன்னதி இருக்கிறது. கருவறைச் சுவர் முழுதும் எங்கே பார்த்தாலும் கல்வெட்டுகள்தான்.
பிரார்த்தனை
இங்கு தரிசித்தாலே போதும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். இல்லத்தில் இனிமை நிறையும்.
நேர்த்திக்கடன்:
துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.மதனகோபால சுவாமிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் மரகதவள்ளி தாயாருக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சித்திரை மாதத்தில் சக்கரத்தாழ்வாருக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி 1008 முறை சுற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தலபெருமை:
தனிக்கோயில் தாயாராக, வலப்புறம் கோயில்கொண்டு அருள்கிறாள் மரகதவல்லித் தாயார். பொன்மகள் தரிசனம். பூப்போல ஆக்குகிறது மனதை. இவளை வணங்குவோரின் திருமணத்தடைகள் அகலும் என்கிறார்கள். இங்கே வருவோர் வாழ்வில் பசுமை என்றும் மாறாது என்பதற்கு சாட்சியம் கூறி நிற்கிறது இத்தலத்தின் தலவிருட்சமான நந்தியா வட்டை கொளுத்தும் கோடையிலும் கொஞ்சமும் வாடாமல் காட்சிதரும் இது. பாண்டவர்களால் நடப்பட்டதாகவும், அன்றுமுதல் இன்றுவரை வாடியதே இல்லை என்றும் சொல்கிறார்கள்.
தல வரலாறு:
சாபம் ஒன்றினால் புலியாகத் திரிந்த வியாக்ரம மகரிஷியின் சாபம் விலகிய தலம் வியாக்ரபுரம்...! யார் அந்த முனிவர்? அவருக்கு என்ன சாபம்? துர்வாசரின் சீடராக இருந்த ஒரு முனிவர், ஒருசமயம் கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டலத்தில் இருந்த நீரைத் தட்டிவிட்டார். அதனால் கோபமடைந்த துர்வாசர். அவரைப் புலியாக மாறும்படி சபித்தார். பதறிப்போனார் சீடர். மன்னிக்கும்படி வேண்டினார். சாபம் விட்டது விட்டதுதான் அதை மாற்ற முடியாது. ஆனால் விமோசனம் சொல்கிறேன். புலியாக நீ உலாவும் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வருவார்கள். அப்போது பீமனின் கதையால் நீ அடிபடுவாய். அந்த சமயத்தில் உன் சாபம் விலகும்! என்றார் துர்வாசர். சாபம் பலித்து சீடன் புலியாகித் திரிந்தான். பூர்வ ஜென்ம வாசத்தால், அக்காட்டிலிருந்த பெருமாளைத் துதித்தான். கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் செய்தார்கள் பாண்டவர்கள். அப்போது ஒரு முனிவர் அவர்களைச் சந்தித்தார். உங்களின் இந்த நிலைக்குக் காரணம் தீவினைப் பாவம்தான். அது தொலைய தீனரட்சகனான அப்படியே புரு÷ஷாத்தமனை பூஜிக்கத் தொடங்கினார்கள் பாண்டவர்கள்.
ஒருநாள் பூஜைக்குத் தேவையான நீரை எடுக்க ஆற்றங்கரைக்குச் சென்ற பாஞ்சாலி, தண்ணீர் எடுக்காமலே பதற்றத்துடன் ஓடிவந்தாள். அவளை ஆசுவாசப்படுத்திய பீமன், அவளது அச்சத்திற்கு காரணம் கேட்டான். பெரிய புலி ஒன்று துரத்துவதுதான் தன் கிலிக்குக் காரணம் என்றாள், பாஞ்சாலி உடனே கதையுடன் புறப்பட்டான் பீமன். தவறவிட்ட நோஞ்சானான பெண்ணுக்கு பதில், திடகாத்திரமான ஆண்... கொழுத்த வேட்டை என்று பாய்ந்தது புலி. அடுத்த கணம் அதன் தலையில் இடி போல் விழுந்தது ஓர் அடி. மரண ஓலம் எழுப்பிய புலி, கீழே விழுந்து துடித்தது... துவண்டது. சட்டென்று முனிவராக மாறி எழுந்தது. புலி பாய்ந்தபோது துணிவுடன் நின்ற பீமன், அது முனிவராக மாறியதும் அதிர்ந்தான். பெரும் தவறு செய்துவிட்டதாக பயந்தான். மன்னிப்பு வேண்டிப் பணிந்தான். கனிவுடன் அவனைப் பார்த்த முனிவர், தமது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சொன்னார். தனக்கு நன்மை செய்த அவனுக்கு வீரம் பன்மடங்காகப் பெருக வரம் அளித்தார்.
வியாக்ரம் என்றால் புலி என்று அர்த்தம். முனிவர் புலிவடிவில் இருந்ததால், அந்தத் தலம் வியாக்ரமபுரம் என்றானது. தமிழில் பெரும்புலிவனம் பெரும்புலியூர் அதுவே மருவி பெரம்பலூர் ஆகிவிட்டது. வழிபாடு செய்த பாண்டவர்களுக்கு வரம் தர வந்தார். வாசுதேவன். அவர்கள் துன்பம் தீர அருளினார் வினை தீர்க்க வந்த வேணு கோபாலா, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்திடவேண்டும். எங்களுக்கு இந்தத் துன்பங்கள் வந்ததற்கு முக்கியமான காரணம், உறவினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனதுதான். எனவே இங்கே வந்து உண்மை வணங்குவோரின் இல்லறம் நல்லறமாக அருள வேண்டும்...! என வேண்டினார்கள் பாண்டவர்கள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அனுமன் சன்னதியின் மேல் அவரது அப்பா வாயுவின் வாகனமான மான் இருப்பது வித்தியாசமானது.