Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
  அம்மன்/தாயார்: வள்ளி தெய்வயானை
  தல விருட்சம்: கடம்பம்
  தீர்த்தம்: சரவணதீர்த்தம்
  ஊர்: பச்சைமலை
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம் தேய்பிறை அஷ்டமி கிருத்திகை சஷ்டி, விசாகம், அமாவாசை ஆகிய நாட்களில் அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு. அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. இத்தலத்தில் முருகனுக்குகந்த விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாட்களில் சத்ரு சம்ஹார ஹோமம், முருகனின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை, பவுர்ணமி அன்று கல்யாண சுப்ரமணியசுவாமி தம்தேவியருடன் திருவீதி உலாவாக கிரிவலம் ஆகியவை இத்தலத்தின் சிறப்பு நிகழ்வுகள். வருட திருவிழாக்களான தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தர் சஷ்டி (சூரசம்ஹாரம்) ஆகியவை முக்கிய விழாக்களாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரதேர் திருவிழா ஏழு நாட்கள் ஏழு விதமான வாகனப் புறப்பாட்டுடனும் காவடி அபிஷேகத்துடனும் நடந்து வருகின்றன. தைப்பூசத்தின்போது சுற்றுவட்டார ஊர்களிலிருந்து காவடிகள் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தும் காட்சி கண் கொள்ளாக் காட்சி ஆகும். ஐப்பசி மாதத்தில் வரும் கந்தர் சஷ்டி விழா இத்தலத்தின் தலையாய விழாவாகும். வாரியார் சுவாமிகள் இத்தலத்திற்கு வருகை புரிந்து முக்கிய திருப்பணி ஆலோசனைகளை வழங்கி உள்ளார். மேலும் இக்குமரன் வாரியார் சுவாமிகளின் இஷ்ட தெய்வமாவார். காலம் காலமாக நம் முன்னோர்களால் வழங்கப்பட்டுவந்த சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதன் உட்கருத்தான சஷ்டி திதியில் முருகனை வேண்டி நோன்பிருந்தால் கருப்பையில் பிள்ளை உண்டாகும் என்பதை விளக்கமாக புரியும்படி அடியார்களுக்குச் சொல்லியவர் வாரியார் சுவாமிகள் தான். எங்கெல்லாம் அவர் சொற்பொழிவு ஆற்றுகிறாறோ அங்கெல்லாம் இந்தக் கருத்தைத் தெரிவிப்பார். அவ்வாறே இத்தலத்திலும் சொல்லி இருக்கின்றார்.  
     
 தல சிறப்பு:
     
  மலைமீது செல்ல மலைப்பாதையும் 180 படிகள் கொண்ட படிப்பாதையும் உள்ளன. படிப்பாதை முடிவில் 40 அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருகனின் ஞானத் திருக்கோலம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி அமைந்திருப்பது சிறப்பு. மலைமீது 100 அடியில் சுவையான நீர் ஊற்று உள்ளது. மிகவும் குளிர்ச்சி பொருந்திய மலை.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பச்சைமலை, ஈரோடு.  
   
போன்:
   
  +91 4285- 222125 
    
 பொது தகவல்:
     
  கோயிலில் பூஜைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால் பக்தர்கள் கூட்டமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. குமரனுக்கு கருங்கற்களால் கருவறை மற்றும் மண்டபம் அமைக்கும் திருப்பணியைத் துவங்க ஒரு குழு அமைக்கப்பட்டது. முதல் கட்டமான மின்வசதி மற்றும் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. கருங்கற்களை மலை மீது கொண்டு செல்ல ஏதுவாக மலைப்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி வேலைகள் சரிவர நடைபெறவில்லை. திருப்பணியில் தடங்கல் தடைகளை எண்ட திருப்பணிக் குழுவினர் மனவேதனை அடைந்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களை சந்தித்து ஆலோசனைப் பெற, சென்று தரிசத்து தங்கள் குறைகளை முன் வைத்தனர். மவுனமாக குறைகளைக் கேட்ட பெரியவர், அடிவாரத்தில் இருக்கும் அண்ணனைக் கவனியாமல் ஆறுமுகனுக்கு வேலை ஆகுமோ? என்றார். அப்போது தான் அடிவாரத்தில் உள்ள அரசமரத்தடி விநாயகருக்கு திருப்பணி மேற்கொள்ள தவறிவிட்டதை உணர்ந்தனர். உடனடியாக விநாயகர் கோயில் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கும் செய்தனர். அதன்பின் மலைக்கோயில் பணிகளைத் தொடங்கினர். பளபளப் பூட்டிய கருங்கற்களினாலான கர்ப்ப கிரகமும் மண்டபத்துள் மயில் வாகனம், சலவைகற்களிலான கொடிமரம், வித்யா கணபதி, மரகதீஸ்வரர், மரகதவள்ளி அம்மன், அருணகிரி நாதர், சனீஸ்வரர் நவகிரஹங்கள் தம் தேவியருடன் ஆகிய தனிச் சன்னதிகளுடன் பணி நிறைவடைந்தது. சங்கராச்சாரியார் அவர்கள் கூறியது போல் எந்தத் தடங்கலும் இல்லாமல் திருப்பணி வேலைகள் இனிதே நிறைவடைந்தன. முன் மண்டபத்தில் அருட்பெருஞ்சோதி மண்டபம் அமைத்து அதில் அணையா தீபம் ஏற்றி உள்ளனர். பிரகாசத்துடன் எரிந்து கொண்டிருக்கிறது. கர்ப்ப கிரகம் கருங்கற்களால் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டப்பட்டுள்ளது. கருங்கற்கள் பளபளப்பாக்கப்பட்டிருப்பதால் பளிங்கு கற்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. தரைத்தளம் வெண்பளிங்கினால் ஆனவை. அர்த்த மண்டபத்தில் நுழைந்தவுடன் அப்படி ஒரு குளுமை, வீரபாகு வீரமகேந்திரன் ஆகியோர் துவார பாலகர்களாக வீற்றிருக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றன. 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு கிட்டாமல் இருந்தவர்கள் பச்சை மலையில் 7 நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு குழந்தை பெற்றோர் ஏராளம். 7ம் நாள் திருக்கல்யாண உற்சவம் முடிந்து தயிர்- தண்டு பிரசாதத்துடன் விரதம் நிறைவடைகிறது. திருமண தடைகள் நீங்க 6 செவ்வாய் கிழமைகளில் கல்யாண சுப்ரமணியருக்கு நெய் தீபம் இட்டு ஆராதனைகள் செய்தால் நிச்சயம் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கிறது. 
    
 தலபெருமை:
     
   மூலஸ்தானத்தில் இளங்குமரனாக ஞானப்பழமாக மேற்குநோக்கி சொர்ண பந்த பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். வலக்கையில் தண்டமும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் சக்தி வேலுடனும் சேவற்கொடியுடனும் கலியுக தெய்வமாக சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்குகின்றார். அர்த்த மண்டபத்தின் ஒரு புறம் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வயானை சமேதரராய் அருள்கின்றார். மறுபுறம் கல்யாண சுப்ரமணியராய் வள்ளி தெய்வயானையுடன் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றார். இவை இரண்டும் உற்சவ மூர்த்திகள் ஆகும். ஒரு சமயம் பங்குனி உத்திர திருவிழாவின் போது அர்ச்சனையுடன் ஹோமமும் செய்தனர். அப்போது வேதங்களை ஓதிக்கொண்டிருந்த அர்ச்சகர் தீடிரென மயங்கி விழுந்தார். மயங்கிய விபரத்தைக் கேட்டபோது கருவறையில் மந்திர சக்தி உக்கிரமாக இருப்பதால் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறினார். அன்று தொட்டு இன்று வரை இதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.கடம்பனின் இஷ்ட மலரைக் கொண்ட கடம்பத்தை தல விருட்சமாகவும், தீர்த்தமாக சரவண தீர்த்ததையும் கொண்டு விளங்குகிறது இத்தலம். (தற்போது சுனை வற்றிவிட்டது) பழநிமலையில் மூலவருக்கு அமைந்துள்ளதைப் போன்றே சொர்ண பந்தனம் செய்விக்கப்பட்டுள்ளது. பழநி மலையில் நடப்பதைப் போன்றே இங்கும் காலை, மாலை நேரங்களில் இராக்கால மகா அபிஷேகம் நடைபெறுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருப்பது போல இரண்டு மயில் வாகனங்கள் அமைந்துள்ளன. அக்னி நட்சத்திரத்தின் போது மரகதீஸ்வரருக்கு தாராபிஷேகமும், 108 லிட்டர் பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் ருத்ராபிஷேகம் 11 முறை ஜெபிக்கப்படுகிறது. இத்தலத்தில் 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன.  
     
  தல வரலாறு:
     
  ஈரோடு மாவட்டம் கோபி நகரின் தென்பாகத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைதான் மரகதகிரி எனப்படும் பச்சைமலையாகும். மரகதக்கல்லின் நிறம் பச்சை எனவே இப்பெயரைப் பெற்றது. வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன். துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்தால் மலையும் தெய்வமும் சிறப்பு பெற்றன. துர்வாச முனிவர் கோபமே உருவான சிறந்த தவசீலர். பொதிகை மலைக்குச் சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் என்னும் ஊரை வந்தடைந்தார். அங்குள்ள சிவன்கோயிலிற்கு சென்று தரிசித்து விட்டு, தன் ஞான சிருஷ்டியால் தினமும் சிவபூஜை செய்ய உகந்த இடம் யாது எனக் கண்டார். அது அரசமரமும் நாக புற்றுக் கண்ணும் அமைந்த மொச்சூர் என்ற தலமாகும். தம் தவவலிமையால் பூஜைப்  பொருட்களை வரவழைத்தார். இடியுடன் கூடிய மழையை பெய்விக்கச் செய்து சிறப்பான ஒரு சிவ பூஜையைச் செய்தார். குறை தீர்க்கும் குமரவேல் இல்லையே என வருந்தினார். அப்போது, முனிவரே உமது சிவபூஜையால் மகிழ்ந்தோம். எங்கள் இளைய குமாரன் இங்கிருந்து அரை காத தூரத்தில் மரகதவள்ளி என்ற தன் தாயின் நிறம் கொண்ட குன்றின் மேல் அருள்கிறார். நீ அந்த மரகத கிரிக்குச் சென்று மேற்கு நோக்கி உள்ள இளம் இமரக் கடவுளைக் கண்டு தொழுது உனது பெயரால் ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜிப்பாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்டது. முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்க எல்லையே இல்லை. அதன்படியே முனிவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று மானசீகமாக பூஜை செய்தார். பின் இறைவனை மனதில் இருத்தி தவம் மேற்கொண்டார். நாக வடிவில் இறைவன் முனிவர் முன் தோன்றி, உமக்கு யாது வரம் வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு முனிவர், இறைவா நான் பூஜித்த இக்குன்று மரகதகிரி எனப் பெயர் பெற வேண்டும். தாங்கள் இளம் குமரனாக குழந்தை வடிவில் எழுந்தருளி அடியார்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் நான் ஸ்தாபித்த சக்கரம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். மந்திரம் எந்திரம், மூர்த்தி, சானித்யம் சூரிய சந்திரன் உள்ளவரை இம்மலை சானித்யமாய் விளங்க வரமளிக்க வேண்டும் என வேண்டினார். அவ்வாறே ஆகுக. கலியுகத்திலும் இம்மலையில் பல திருவிளையாடல்கள் செய்து அடியார் தம் குறைகளை தீர்த்தருள அனுக்கிரகம் செய்வோம் எனக்கூறி  நாகம் மறைந்தது. முருகன் ஒருவனையே தன் இஷ்ட தெய்வமாக வழிபடும் அடியார் ஒருவர் 24.7.54 அன்று இளங்குமரனை வணங்கிக் கொண்டிருந்தார். அப்போது கருவறையில் ஒரு ஜோதி தோன்றியது. நான் பல காலம் இங்கு தனிமையில் வாடிக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ வசதி படைத்தவர்கள் இவ்வூரில் இருந்தாலும் என்னைக் கவனிக்க ஆள் இல்லையே. இன்று முதல் என்னைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு என இளங்குமரன் இட்ட ஆணையை மானசீக மாக உணர்ந்து தொடரப்பட்ட ஒரு கால பூஜை படிப்படியாக உயர்ந்து தினமும் ஆறுகால பூஜை நடக்கும் அளவிற்கு வந்தது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மலைமீது செல்ல மலைப்பாதையும் 180 படிகள் கொண்ட படிப்பாதையும் உள்ளன. படிப்பாதை முடிவில் 40 அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருகனின் ஞானத் திருக்கோலம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி அமைந்திருப்பது சிறப்பு. மலைமீது 100 அடியில் சுவையான நீர் ஊற்று உள்ளது. மிகவும் குளிர்ச்சி பொருந்திய மலை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar